search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்னி பஸ்கள்"

    பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். #Pongal2019 #OmniBuses
    போரூர்:

    பொங்கல் பண்டிகை நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 12-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைத்தது.

    இதனால் சென்னை மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து தென் மாவட்டத்துக்கு செல்ல 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், தாம்பரம் ரெயில் நிலையம் ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11-ந்தேதி இரவு முதலே பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    இதன் காரணமாக பஸ் நிலையங்களில் தினந்தோறும் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் ரெயில் நிலையம், ஆம்னி பஸ் நிலையத்திலும் கடும் கூட்டம் காணப்படுகிறது.

    பயணிகளின் கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் சாதாரண ஆம்னி பஸ்சில் ரூ. 1,100 முதல் ரூ. 1,500 வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக ரூ. 600 முதல் ரூ. 700 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல் படுக்கை வசதி உள்ள பஸ்களில் ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை வசூலித்தனர்.

    சென்னையில்இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் பஸ்களில் ரூ. 2200 முதல் ரூ. 2500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டண உயர்வு கடந்த 9-ந்தேதி முதலே வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை- பெங்களூர், சென்னை-கோவை, சென்னை-திருச்சி, சென்னை - தஞ்சாவூர், சென்னை-மயிலாடுதுறை, சென்னை-கரூர் இடையே இயக்கப்பட்ட பஸ்களிலும் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை கட்டணமாக பெற்றனர்.


    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதுதவிர விதிமுறையை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களிடம் இருந்து ரூ. 30 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 11-ந்தேதி முதல் நேற்று வரை 10 ஆயிரத்து 427 பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

    நாளை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று இரவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆம்னி பஸ் கட்டணம் குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘சில சிறிய தனியார் பஸ் உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்துள்ளனர். பெரிய பஸ் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. வழக்கமான கட்டணத்தையே வசூலித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pongal2019 #OmniBuses
    ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகள் ஆம்னி பஸ்களில் உயர்த்தப்பட்ட இருமடங்கு கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது. #OmniBuses
    நாகர்கோவில்:

    தமிழக அரசு பஸ்களில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த பின்னர், ஆம்னி பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    கட்டண உயர்வுக்கு பின்னர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்களில் ரூ.800-ம் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.1100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் இக்கட்டணத்தை உயர்த்தி வாங்குவதாக அடிக்கடி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

    குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போதே ஆம்னி பஸ்கள் இது போன்ற கட்டண உயர்வை பயணிகள் மீது திணிக்கும்.

    ஆனால் இம்முறை ஓணம் பண்டிகைக்காக நாகர்கோவில் வந்த பயணிகளும் இந்த கட்டண உயர்வை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இம்முறை நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்ல குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் ரூ.2500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்வோர் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்வார்கள். ஓணப்பண்டிகை முடிந்து நேற்று ஊருக்கு புறப்பட ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்த போது அங்கும் கூடுதல் கட்டணம் குறிப்பிடபட்டிருந்தது.

    இது வழக்கமாக ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் நேற்று வடசேரியில் உள்ள ஆம்னி பஸ்நிலையத்தில் பயணிகளுக்கும், ஆம்னி பஸ் கண்டக்டர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் மூண்டது.


    ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட டிக்கெட் கட்டணத்தை காட்டிலும் பயண நேரத்தில் வழங்கப்பட்ட டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. குறிப்பாக ரூ.800-க்கான டிக்கெட் கட்டணம் ரூ.2000-க்கும், ரூ.1100-க்கான சென்னை செல்லும் டிக்கெட் கட்டணம் ரூ.2500 முதல் ரூ.2800 வரையிலும் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

    அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பஸ்களை தேடிவந்தவர்கள் இக்கட்டண உயர்வை கண்டு அதிர்ந்தனர். அவர்கள் நேற்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் வடசேரி ஆம்னி பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி பாதிக்கப்பட்ட பயணிகள் கூறும்போது, அரசுதான் இக்கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்நிலையங்களில் முகாமிட்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் லைசென்சையும் ரத்து செய்ய வேண்டும். எச்சரிக்கை செய்கிறோம் என்று கூறுவதைவிட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் மக்களுக்கு பலன் கிடைக்கும். அதற்கு அரசு அதிகாரிகள் முன்வரவேண்டும், ஆன்லைனில் கூடுதல் கட்டணம் பதிவிட்ட ஆம்னி பஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு ஆன்லைனில் அவர்கள் பதிவிட்ட கட்டண விபரங்களே போதும், என்றனர். #OmniBuses
    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு முதல் கட்டமாக 100 சொகுசு பஸ்கள் வழங்கப்படுகிறது. முதன் முதலாக ஏசி படுக்கை வசதியுடன் அரசு பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. சென்னை-திண்டுக்கல் வழித்தடத்தில் மட்டும் கழிப்பிட வசதியுடன் கூடிய அல்ட்ரா டீலக்ஸ் பஸ் விடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, தேனி, போடி, சேலம், கரூர், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு படுக்கை வசதி சொகுசு பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கீழக்கரை ஆகிய பகுதிகளுக்கு ஏசி படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை-பெங்களூர் இடையே படுக்கை வசதி பஸ் இன்று விடப்பட்டது. ஏற்கனவே விடப்பட்ட சொகுசு பஸ்களில் போடி, கரூர் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்படுகின்றது. மற்ற வழித்தடங்களில் எல்லா நாட்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் போடி, கரூருக்கு இன்று முதல் எழும்பூரில் இருந்து அரசு விரைவு சொகுசு பஸ் இயக்கப்படுகின்றன. எழும்பூரில் இருந்து இரவு 7 மணிக்கு போடிக்கும், 8 மணிக்கு கரூருக்கும் ஏசி படுக்கை வசதி சொகுசு பஸ் புறப்பட்டு செல்கின்றன.

    எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் புறப்பட்டு செல்வதால் ரெயிலில் இடம் கிடைக்காதவர்கள், தவற விட்டவர்கள் ஆம்னி பஸ்களில் பயணம் செய்கிறார்கள். எழும்பூரில் ரெயில் நிலையம் பகுதியில் ஆம்னி பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஆம்னி பஸ்கள் சாலையை ஆக்கிரமித்து கொள்வதால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகமும் எழும்பூரை மையமாக வைத்து பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, கிழக்கரை உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் எழும்பூரில் இருந்து விரைவில் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    ரெயில் பயணிகளை குறி வைத்து ஆம்னி பஸ்கள் எழும்பூரில் இருந்து இயக்குவது போல் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்ட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஏசி படுக்கை வசதி பஸ்களை மட்டும் எழும்பூரில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்துள்ளோம். தலைமை செயலகம், எழிலகம், உள்ளிட்ட அரசு பணிகள் தொடர்பாக வெளியூரில் இருந்து வரகூடியவர்கள் எழும்பூரில் இருந்து தான் பயணத்தை தொடருகிறார்கள்.

    ரெயிலில் இடம் கிடைக்காத பயணிகள் பஸ்கள் மூலம் சொந்த ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் கோயம்பேடு சென்று அங்கிருந்து பயணத்தை தொடர்வதை காட்டிலும் எழும்பூரில் இருந்து அரசு பஸ்களில் பயணத்தை தொடர இது உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ×